தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானபட்டியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மருத்துவச் சேவை அணியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (டிச.26) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமைத் தாங்கினார்.
கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த 1,600 நபர்களின் உடலை சிறந்த முறையில் அடக்கம் செய்த மருத்துவச் சேவை அணிக்கு பாராட்டுக்களை தெரிவித்து, அந்தப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு அவர் கேடயம் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் பொது சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனை உள்ளிட்டவைகளில் போதிய அளவு மருத்துவர்கள், செவிலியர்களை பணி அமர்த்தாமல் அம்மா மினி கிளினிக் உருவாக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை உள்ளிட்டவைகளை தனியார் மயமாக்கும் திட்டமாக இருக்கும் என சந்தேகம் வருகிறது. தோல்வி பயத்தால் தான் திமுகவின் கிராம சபை கூட்டத்திற்கு அதிமுக அரசு தடை போடுகிறது. அதிமுக எனும் கட்சி பாஜகவிடம் அடகு வைக்கப்பட்ட கட்சியாகும்.
ரஜினிகாந்த் - கமல்ஹாசன் அரசியல் வருகை குறித்து கேட்டதற்கு, திரைத்துறையில் ஓய்வுப் பெறும் நிலையில் நடிகர்கள் அடுத்தகட்ட வேலைவாய்ப்பைத் தேடி அரசியலுக்கு வருகின்றனர். அரசியலுக்கு வரும் நடிகர்கள் மக்களுக்காக எந்த ஒரு சேவையும் செய்யவில்லை, போராடி சிறை செல்லவும் இல்லை. அவர்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க : உத்திரகோசமங்கை ஆருத்ரா தரிசனம்! - பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!