2021 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவையும் சேர்க்க வேண்டும், மருத்துவ சேர்க்கையில் ஓபிசி மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்மரபினர் சமூக மக்கள் தேனி மாவட்டத்தில் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர்களுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர். மேலும் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை சட்டமன்ற, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சட்டமாக இயற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை நடப்பு கூட்டத் தொடரில் அரசு நிறைவேற்றாமல் முகத்தில் கரியை பூசி விட்டதாகக் கூறி, நேற்று (செப்.21) தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீர்மரபினர் சமூக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரை நிர்வாணமாக தங்களது உடலில் கரியைப் பூசிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் நின்று அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.