தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியத்திற்குள்பட்ட இராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் உழவர் காளிதாசன். இவர் தனக்குச் சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தில் வேளாண்மை செய்துவருகிறார்.
இதில் இரண்டு ஏக்கர் நிலத்தில் கடலை சாகுபடி செய்வதற்காக சின்னமனூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் 2020ஆம் ஆண்டு டிசம்பரில் 11 ஆயிரம் ரூபாய்க்கு விதைகள் வாங்கி சாகுபடி செய்துள்ளார். ஆனால் விளைச்சல் எதிர்பார்த்த அளவில் இல்லாமல், தரம் குறைந்த நிலையில் பயிர்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தரமில்லா விதைகள் வழங்கிய வேளாண் விரிவாக்க மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உழவர் காளிதாசன் நேற்று (பிப். 22) மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். மேலும் தரமில்லாமல் அறுவடைசெய்யப்பட்ட கடலை பருப்புகளை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கொட்டி தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட உழவர் காளிதாசன் கூறுகையில், "உழவு, மருந்து, களையெடுத்தல் என இரண்டு மாதம் முறையாகப் பராமரித்துவந்தோம். இதற்காக ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவுசெய்துள்ளோம். ஆனால் விளைச்சலோ 70 விழுக்காடு குறைந்ததோடு மட்டுமல்லாது தரமில்லாமல் உள்ளது.
இது குறித்து வேளாண் அலுவலர்களின் ஆலோசனை கேட்டால் இந்த ரக பயிர்கள் இவ்வாறுதான் வளர்ச்சி அடையும், இதனை எண்ணெய் வித்துகளாக மாற்றம் செய்வதற்கு விற்பனை செய்யுங்கள் என்கிறார்கள்.
ஆனால் இதனை எண்ணெய் தயாரிப்பிற்குக்கூட எடுத்துக்கொள்ள வியாபாரிகள் யாரும் முன்வருவதில்லை. எனவே உழவர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்வதற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்.
மேலும் தரமில்லா விதைகள் வழங்கிய வேளாண் அலுவலர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் பாஜக செய்வது ஒத்திகை - நாளை தமிழ்நாட்டிலும் நடக்கலாம்?