தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு நீரினை பயன்படுத்துவோர் விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் பி.டி.ஆர்.பி. விஜயராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "அரசாணைப்படி ஜூன் முதல் வாரத்தில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 112 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தாலே கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல்போக சாகுபடிக்காகத் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், சில ஆண்டுகளாக மிகவும் தாமதமாகத் திறக்கிறார்கள். கடந்த ஆண்டு 131 அடிக்கு மேல் உயர்ந்த பிறகு தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டது.
அதேபோன்று இந்த ஆண்டும் 136 அடியை எட்டிய பிறகே இரண்டு மாதம் கழித்து, கடந்த 13ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போக நெல் சாகுபடி கேள்விக்குறியாக மாறியுள்ளது. இது விவசாயிகளைப் பழிவாங்கும் நோக்கில் செய்யப்படுவதாகத் தெரிகிறது.
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைப்படி 200 கனஅடி நீர் பாசனத்திற்கும், 100 கனஅடி குடிநீருக்கும் என மொத்தம் 120 நாள்களுக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு மாறாக இரண்டாயிரம் கனஅடி நீர் வரை முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வெளியேற்றப்படுகிறது. இதனால் 137 அடியில் இருந்த நீர் மட்டம் கடந்த 10 நாள்களில் 131 அடியாக குறைந்தது.
பொதுவாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஆயிரத்து 400 அடிக்கு மேல் தண்ணீர் திறப்பதற்கு அரசாணை பெற்றிருக்க வேண்டும்.
கடந்த நான்கு மாத காலமாக எந்தவொரு அரசாணையுமின்றி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கனஅடி நீர் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து எடுக்கப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு பொதுப்பணி, குடிநீர் வடிகால் வாரியத்தினர் உரிய ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வேண்டுகோள்விடுத்தார்.
இதையும் படிங்க: கரோனா கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை: வருகிறது அவசரச் சட்டம்!