தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையிலிருந்து மேல்மங்கலம், அதனைச் சுற்றியுள்ள பாசன நிலத்திற்கு அரசாணைப்படி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தேனி திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் இன்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மேல்மங்கலம், வராகநதி, ராஜவாய்க்கால் பாசன நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட அந்த மனுவில், "2009ஆம் ஆண்டு அரசாணை நிலை எண் 212இன்படி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் ஆகிய கிராமங்களில் உள்ள 2,500 ஏக்கர் நஞ்சை நிலத்திற்கு எந்தவித நிபந்தனையுமின்றி சோத்துப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது உத்தரவு.
ஆனால், கடந்த அக்டோபர் 26ஆம் தேதி சோத்துப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வழங்க பொதுப்பணித் துறையினர் மறுத்துவருகின்றனர். 2009ஆம் ஆண்டு பெறப்பட்ட அரசாணை செல்லாது எனவும், ஒவ்வொரு ஆண்டும் அரசாணை பெற்ற பிறகுதான் தண்ணீர் வழங்க முடியும் எனவும் பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர். எனவே இது குறித்து நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், "சோத்துப்பாறை அணையிலிருந்து 2009ஆம் ஆண்டு அரசாணைப்படி கடந்த 10 ஆண்டுகளாகத் தண்ணீர் திறக்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு தண்ணீர் திறக்க மறுக்கும் பொதுப்பணித் துறையினர், எந்தவித அரசாணையும் இன்றி புதிய ஆயக்கட்டு பகுதியான கைலாசபட்டிக்கு அருகே உள்ள சுமார் 600 ஏக்கர் பாசன நிலத்திற்கு தண்ணீர் திறந்துவிடுகிறார்கள்.
இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரை, அவர் பரிசீலனை செய்வதாகத் தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தல் முடிந்து 11 மாதங்கள் ஆகியும் பெரியகுளம் ஒன்றியக் குழுத் தலைவருக்கான தேர்தல் நடத்தப்படாமல் காலம் தாழ்த்திவருவது தொடர்பாகவும் புகார் அளித்துள்ளோம்.
மேலும், பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள வார்டு உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சிக்குப் பொது நிதியிலிருந்து பணம் எடுத்துச் செலவு செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: பணத்தை பதுக்குவதற்காக ஓபிஆர் மொரீசியஸ் பயணம் - தங்க தமிழ்செல்வன் தகவல்