தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நகரக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (நவ-17) நடைபெற்றது.
தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்ததமிழ்செல்வன் பங்கேற்று புதிய வாக்காளர்கள் சேர்க்கை முகாம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை விபரங்கள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அதன் பின்னர் நமது ஈடிவி பாரத் செய்திகளுக்காக அவர் அளித்த பேட்டியில், "வருகின்ற நவம்பர் 21, 22 மற்றும் டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் வாக்காளர் சேவை முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.
இதில் புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம், பெயர் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் அரசு அலுவலர்களால் வழங்கப்படுகின்றன. இவற்றில் திமுகவின் தேனி வடக்கு மாவட்ட பகுதிகளுக்கு உட்பட்ட மையங்களில் அதிகப்படியான வாக்காளர் சேர்க்கை மற்றும் தகுதியுள்ள வாக்காளர்கள் நீக்கப்படுவதை கண்டறியும் முகவர்களுக்கு முதல் பரிசாக 1 சவரன் தங்க மோதிரம், இரண்டாம் பரிசாக அரை சவரன் தங்க மோதிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்கப்படும்.
புதிய வாக்காளர் சேர்க்கை அதிகரித்து, அவர்களை திமுகவில் இணைப்பதனால் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக அமர வேண்டும் என்பதே இந்த அறிவிப்பின் நோக்கம்.
அதிமுக அரசின் ஊழல் பட்டியல் மத்திய அரசிடம் இருப்பதால்தான், தமிழ்நாட்டில் தடையை மீறி பாஜக மாநில தலைவர் நடத்தும் வேல் யாத்திரையை தடுப்பதற்கு முதலமைச்சர் தயங்குகிறார். ஊழலால் கைது செய்யப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் முதலமைச்சர் இரட்டை வேடம் போடுகிறார்.
அமித் ஷாவின் வருகையால் அதிமுகவினர் பயத்தில் உள்ளனர். அவரது வருகைக்குப் பிறகு அதிமுகவில் மாற்றம் ஏற்படும்.
ஊழல் பணத்தை பதுக்குவதற்காக மொரிசீயஸ், மாலத்தீவு சென்று பாரீஸில் இளம்பெண்களுடன் உல்லாசப் பயணம் செய்ததாக தேனி எம்.பி. ஓ.பி. ரவீந்திரநாத் மீது எழுந்த குற்றச்சாட்டிற்கு அவர் உள்பட முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்.
இது தொடர்பாக என் மீது வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்கவும் தயாராக உள்ளேன்" என்றார்.