தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள லட்சுமி நாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு அய்யனார் என்ற சுயேச்சை வேட்பாளர் போட்டியிட்டார். இவருக்கு தேர்தல் ஆணையம் ஏணி சின்னத்தை ஒதுக்கியிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கையின் போது, குளறுபடியால் தனது வெற்றி வாய்ப்பு பறிபோனதாகக் கூறி அய்யனார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தேவாரம் காவல் துறையினர் நடத்தியப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து சுயேச்சை வேட்பாளர் அய்யனார் பேசுகையில், "வாக்கு எண்ணிக்கையன்று முதலில் 870 வாக்குகள் பெற்று தான் வெற்றி பெற்றுவிட்டதாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.
ஆனால் சில மணி நேரத்தில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட செல்லப்பா என்ற வேட்பாளர் 873 வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றதாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் கூறியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதனால், வெற்றி வாய்ப்பு பறிபோவதோடு மட்டுமல்லாமல் தனது வாக்குகள் திருடப்பட்டுள்ளது.
பணம் பெற்றுக்கொண்டு ஒரு தலைபட்சமாக செயல்பட்ட தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கவுள்ளேன் என்றார்.
இதையும் படிங்க: தேர்தல் அலுவலர்களை மிரட்டிய சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் - ஆட்சியர்..!