தமிழ்நாடு – கேரள எல்லையில் அமைந்துள்ளது தேனி மாவட்டம். அங்குள்ள குமுளி, கம்பம் மெட்டு மற்றும் போடி மெட்டு ஆகிய 3 மலைச்சாலை வழியாக கேரளாவின் இடுக்கி, பத்தினம்திட்டா உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றடையலாம்.
இவற்றில் குமுளி மலைச்சாலையானது, திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப்பில் இருந்து 6 கி.மீ தூரமுள்ள இந்த மலைச்சாலையில் தற்போது நான்கு வழிச்சாலைகளுக்காக சிறு பாலங்கள், சாலை பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
பணிகள் தொய்வின்றி தீவிரமாக நடைபெறுவதற்கு வசதியாக வருகின்ற டிசம்பர் 24 முதல் 30ஆம் தேதி வரையில் குமுளி மலைச்சாலையில் வாகனங்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (டிச.22) வெளியிட்டுள்ள அறிக்கையில், “குமுளி மலைச்சாலைக்கு மாற்று வழியாக சரக்கு வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும் கம்பம்மெட்டு சோதனைச் சாவடி வழியாக செல்ல வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குன்னூரில் அம்மா மினி கிளினிக் திறப்பு!