கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் ஏலம், காபி, தேயிலை போன்ற நறுமணப் பொருட்கள் சாகுபடி பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது.
இவற்றில் பெரும்பாலான தோட்டங்கள் தமிழ்நாடு விவசாயிகளுக்குச் சொந்தமானது. மேலும் தமிழ்நாடு – கேரள விவசாயிகளின் தோட்டப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தமிழர்களே.
அதுவும் தேனி மாவட்டத்தில் இருந்து நாள்தோறும் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர்.
கரோனா தொற்று பரவலால் மாநில எல்லைகள் மூடப்பட்டு பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் கேரளா செல்ல தமிழ்நாடு தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்த தடையால் நறுமணப் பொருட்களின் சாகுபடி பாதிப்படைந்தது.
எஞ்சிய பயிர்களை காவாந்து செய்து பராமரிப்பதற்காகவாவது அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, கேரள அரசின் இ - பாஸ் அனுமதி பெற்றுச் சென்று வரலாம் என தெரிவிக்கப்பட்டு குறிப்பிட்ட அளவிலான அனுமதி மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், இ - பாஸ் பெற்று போடி மெட்டு வழியாக இடுக்கி மாவட்டத்திற்கு சென்ற தமிழ்நாடு தொழிலாளர்களின் வாகனத்திற்கு இன்று கேரள காவல் துறையினர் அனுமதி மறுத்தனர்.
இதனால், தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியான போடி மெட்டில் உள்ள கேரள அரசின் சோதனைச் சாவடி அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போடி காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான காவல் துறையினர் கேரள காவல் துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், இடுக்கி மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்று அதிகமாக பரவுவதால் தமிழ்நாட்டிலிருந்து தொழிலாளர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டதால் இன்று அனுமதி மறுக்கப்பட்டதாக கேரள காவல் துறையினர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இ - பாஸ் பெற்று குறிப்பிட்ட அளவிலான தொழிலாளர்களுடன் வரும் வாகனங்களுக்கு நாளை முதல் அனுமதிப்பதாக கேரள காவல் துறையினர் கூறியதையடுத்து தமிழ்நாடு தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
இதன் காரணமாக, போடி மெட்டு மலைச் சாலை சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.