ஆண்டுதோறும் நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி அலுவலர்கள், பொதுப்பணித் துறையினர் அனுமதியுடன் அணைகள், மற்றும் மின்நிலையங்களை ஆய்வு செய்வது வழக்கம்.
இந்நிலையில் திருச்சி நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி நிறுவன அலுவலர்கள், அதிகாரிகள், பொறியாளர்கள் என 27 பேர் கொண்ட குழுவினர் நேற்று பெரியாறு வைகை வடிநில பகுதிகளில் களஆய்வு செய்வதற்காக வந்தனர்.
இவர்கள் இடுக்கி அணை, பெரியாறு அணை, போர்பை டேம், பெரியாறு நீர்மின் நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு முடித்து வைகை செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று (பிப்.5) காலை இக்குழுவினர் பெரியாறு அணைக்குச் செல்வதற்காக தமிழக அதிகாரிகளுடன் சென்றனர். அவர்களை தேக்கடி படகுத் துறையில் தடுத்த கேரள வனத் துறையினர், புலிகள் சரணாலய இணை இயக்குநரிடம் முறையான அனுமதி பெறவில்லை எனக்கூறி, பெரியாறு அணைக்கு செல்ல அனுமதிக்கவில்லை.
இதனால் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்த குழுவினர் பின்னர் இடுக்கி அணையை பார்வையிட சென்றனர். பின்னர் மீண்டும் பெரியாறு அணைக்கு செல்வதற்காக தேக்கடி படகுத் துறைக்கு சென்றனர். அப்போதும் அவர்களுக்கு கேரள வனத் துறையினர் அனுமதி மறுத்தனர்.
இதனால் மாலைவரை காத்திருந்த குழுவினர் பின்னர் அங்கிருந்து கிளம்பி, போர்பைடேம், பெரியாறு நீர்மின் உற்பத்தி நிலையத்தை பார்வையிட்டு கிளம்பினர்.
கேரள வனத் துறையின் இந்த செயலுக்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு, தமிழக அதிகாரிகளை புறக்கணிப்பது வழக்கமாக நடந்து கொண்டிருக்கிறது. எனவே தமிழக அரசு இதில் தலையிட்டு உரிய தீர்வு கான வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.