தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைந்துள்ளது தேனி மாவட்டம். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை இங்குள்ள போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி ஆகிய மூன்று மலைச்சாலைகள் இணைக்கின்றன.
இதில் கூடலூர் அருகே உள்ள குமுளி சாலை வழியாக புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயில், தேக்கடி படகுத் துறை உள்ளிட்டவை முக்கிய இடங்களுக்குச் செல்லும் வழித்தடம் திகழ்கிறது. இந்நிலையில், இரு மாநில எல்லைப் பகுதியான குமுளியில் உள்ள சாலையோர தமிழக வியாபாரிகளின் கடைகளை இடிக்கப் போவதாக நெடுஞ்சாலைத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, வியாபாரிகள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக அளித்துள்ள மனுவில், “கடந்த 20 ஆண்டுகளாக குமுளியில் உள்ள நெடுஞ்சாலை ஓரத்தில் 31 நபர்கள் கடை வைத்து தொழில் நடத்திவருகின்றோம். கரோனா நோய் பரவலால் மாநில எல்லைகள் அடைக்கப்பட்டதன் காரணமாக மார்ச் 24முதல் கடைகளை அடைத்துவிட்டோம்.
கடந்த ஒன்பத மாதங்களாக நீடிக்கும் இந்தத் தடையால் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் தவிக்கும் நிலையில், எங்கள் கடைகளை இடிக்கப் போவதாக நெடுஞ்சாலைத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எங்களுக்கு மாற்று இடம் தருமாறும் அதுவரையில் கடை நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குமுளி சாலையோர வியாபாரிகள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.