தேனி : கம்பம் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் அரிசி கொம்பன் யானையை பிடிக்கும் முய்றசியில் தமிழக - கேரள வனத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ள நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவும், வெளி நபர்கள் கம்பம் நகருக்குள் நுழையாதவாறும் கம்பம் நகருக்கு போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது.
கேரள மாநிலம் மூணாறு சின்னக்கல் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த அரிசி கொம்பன் யானையை கடந்த மாதம் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், 4 கும்கி யானையின் உதவியுடன் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள பெரியார் புலிகள் வன சரணாலயத்தில் விட்டனர்.
அங்கிருந்து தமிழக வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்த அரிசி கொம்பன் யானை ஹவேவிஸ் மேகமலை பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில் நேற்று இரவு குமுளி ரோஜா பூ கண்டம் வழியாக லோயர் கேம்ப் பகுதிக்கு இடம் பெயர்ந்த யானை கூடலூர் அருகே கழுதை மேட்டுப்பகுதியில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் புகுந்து விவசாய பயிர்களை அழித்து அங்கேயே தஞ்சம் அடைந்து நின்றுள்ளது.
யானை கூடலூர் அருகே உள்ள கழுதை மேட்டில் தொடர்ந்து கண்காணித்து வந்தனர் . இன்று (மே.27) காலை நான்கு மணி அளவில் அரிசி கொம்பன் யானை இடம் பெயர்ந்து கூடலூர் வழியாக கம்பம் பகுதியை வந்தடைந்தது. அங்கிருந்த விளை நிலங்களை சேதப்படுத்தியும் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஊருக்குள் சுற்றித் திரிந்தது.
கம்பம் நகர் பகுதிக்குள் ஏகலூத்து சாலை வழியாக நுழைந்த அரிசி கொம்பன் யானை நாட்டுக்கள் தெரு, மின்சார வாரிய அலுவலக தெரு, நெல்லு குத்தி, புளியமரம் சாலை பகுதியில் புகுந்து சாலையில் நடந்து சென்றவர்களை விரட்டியது. யானை துரத்தி கீழே விழுந்ததில் ஒருவர் பலத்த காயமும் இருவர் லேசான காயமும் அடைந்துள்ளனர்.
படுகாயம் அடைந்தவர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் கம்பம் நகர் பகுதியில் உலா வந்த யானை, பொதுமக்கள் சத்தமிட்டதை கண்டு மிரண்டு மின்சார வாரிய அலுவலகத் தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான புளியமர தோப்பில் தஞ்சம் அடைந்தது.
தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வண்ணம் அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடமாடுவதற்கு தடை விதித்து தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கம்பம் நகர் முழுவதும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருக்கின்றது. கம்பம் நகர் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். மேலும் அரிசி கொம்பன் யானையை பிடிப்பதற்காக பொள்ளாச்சி டாப் ஸ்லீப் பகுதியில் இருந்து முத்து மற்றும் சுயம்பு என்கிற இரண்டு கும்கி யானைகள் அழைத்து வரப்பட உள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் கம்பம் நகரில் தேனி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஏராளமான போலீசார் மற்றும் தமிழக கேரள வனத்துறையினர் வருவாய் துறையினர் என மாவட்ட நிர்வாகமே யானையை பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். விளைநிலங்களை சேதப்படுத்தியும், ஊர் மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் அரிசி கொம்பனை பிடிக்க இரு மாநில வனத் துறையினரும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க : சின்னகானல் நோக்கி நகரும் அரிசிகொம்பன் காட்டு யானை! வாழ்விடம் நோக்கி பயணம்!