தேனி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்களில் கம்பம் அருகே உள்ள சுருளி நீர்வீழ்ச்சி சிறப்புமிக்கது. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் அணையிலிருந்து வரும் நீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்று நீரும் அருவியின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளாக உள்ளன.
கோடை காலம் தொடங்கியதால், தூவானம் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்டது. மேலும், சுருளி அருவிக்கு நீர்வரக்கூடிய ஊற்றுப்பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் சுருளி அருவிக்கு நீர் வரத்து நின்றுபோனது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கோடை மழையினால் சுருளி அருவியில் நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதித்தனர். பள்ளி விடுமுறை, கோடை காலம் என்பதால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் அருவிக்கு வருகை தந்தனர்.
ஆனால் தற்போது மீண்டும் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து நின்று போனதால் சுரளி அருவி வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு இன்று முதல் வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால், அருவியில் குளிக்க வேண்டும் என்பதற்காக குதூகலத்துடன் வருகின்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.