தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ளது டி.சிந்தலைச்சேரி கிராமம். சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இக்கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் வேல்முருகன் - ஆரோக்கியம்மாள். இவர்களுக்கு தனுஷ், கவியரசன் என்ற இரு மகன்கள் உள்ளனர். கூலி வேலை பார்த்து வந்த வேல்முருகன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதை அடுத்து கொய்யாப்பழம் மற்றும் தண்ணீர் பழம் விற்றும் தனது குடும்பத்தை நடத்தி வந்தார் ஆரோக்கியம்மாள்.
இளைய மகன் கவியரசன் (14) அப்பகுதியிலுள்ள அமல அன்னை மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த வாரம் இப்பகுதியிலுள்ள செபஸ்டியன் என்பவரது தோட்டத்தில் இரண்டு மண்வெட்டிகளைக் காணவில்லை என ஊர் நாட்டாமையும், பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் திரவியம் (50) என்பவரிடம் புகார் கூறியுள்ளார். இதற்கிடையே மண்வெட்டியுடன் கவியரசனை பார்த்ததாக பள்ளி ஆசிரியர் திரவியத்திற்கு தகவல் வந்ததைத் தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக மாலை நேரத்தில் பள்ளி முடிந்த பின்பு கவியரசனை அவர் அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவர் வீட்டிற்குச் சென்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மகன் தூக்கில் துடிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய், மாணவனை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள தேவாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
மாணவனின் இறப்பில் சந்தேகமடைந்த கவியரசரின் பெற்றோரும், உறவினர்களும் சம்பவம் குறித்து விசாரித்து திரவியத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேவாரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இதற்கிடையே ஆசிரியர் திரவியம் எங்கு இருக்கிறார் என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக தேவாரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மண்வெட்டியைத் திருடியதாகக் கூறி ஆசிரியர் அடித்ததால், மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.