தேனி: ஆண்டிபட்டி அருகே ஆன்லைன் வகுப்பு புரியவில்லை எனக்கூறிய மகனை தந்தை கண்டித்ததில், மனமுடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கரட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகன் விக்கிரபாண்டி (16). இவர், திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். கரோனா காரணமாக வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், விக்கிரபாண்டி அவரது அப்பாவிடம் ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என்று தெரிவித்ததோடு, வகுப்புகளை தொடர்ந்து புறக்கணித்துள்ளார். இதுதொடர்பாக மகனை தந்தை கண்டித்துள்ளதாகத் தெரிகிறது. இதில் மனமுடைந்த மாணவன், இன்று(செப்.2) காலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஆபத்தான நிலையில் மாணவனை மீட்ட பெற்றோர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விக்கிரபாண்டி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கானாவிலக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணம் உண்டானாலோ அதை மாற்ற கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் -044 -24640050.
இதையும் படிங்க: மருத்துவர் கனவில் இருந்த மாணவி நீட் தேர்வால் தற்கொலையா?