தேனி: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துசங்கிலிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அய்யனார் மற்றும் கற்பகவல்லி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இவர்கள் தினக் கூலியாக வேலை செய்து தன் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைத்து வருகின்றனர். இவர்களது மூத்த மகள் ரூபிகா(14) ஆண்டிபட்டி, ஆசாரிபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் முத்துசங்கிலிபட்டி கிராமத்தில் உள்ள சில தெருக்களில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்டத்தின்கீழ் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி, ஊராட்சி ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்று பணிகள் முடிவு பெற்றது. இந்தப் பணிக்கான பெயர், திட்ட மதிப்பீடு குறித்த விவரங்கள் பொறிக்கப்பட்ட விளம்பரச் சுவர் அமைக்கப்பட்டது. இந்தச் சுவரின் அடித்தளம் உறுதியாக அமைக்காமல் தரமற்று இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூபிகா, தனது பள்ளியை முடித்துவிட்டு முத்துசங்கிலிபட்டியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பும்போது தெருவில் அமைக்கப்பட்டிருந்த திட்ட மதிப்பீட்டுக்கான விளம்பரச்சுவர் திடீரென ரூபிகாவின் மீது விழுந்து, அவர் வலியால் கதறி அழுது துடித்தார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிறுமிக்கு பரிசோதனை செய்ததில் சிறுமியின் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் கால்களில் பிளேட் வைக்கப்பட்டு மாவுகட்டு போடப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சிறுமி ரூபிகா பள்ளி படிப்பிலும் நன்று படிக்கக்கூடிய மாணவியாகவும் விளையாட்டுப் போட்டிகளிலும் குறிப்பாக கால்பந்து விளையாட்டில் மண்டல அளவில் பங்கேற்று வெற்றி பெற்றும் இருக்கிறார். தன் நண்பர்களுடன் ஓடி ஆடி விளையாடி, மகிழ்ச்சியாக இருந்த சிறுமியின் கால்கள் ஊராட்சியின் அலட்சியத்தால் கால்கள் முறிந்து வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருப்பது அவர்கள் பெற்றோர் இடையே வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து இந்து இளைஞர் முன்னணி சார்பில் கூறுகையில், ”தன் மகளின் கால்களை சரி செய்து அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் என அனைவரிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை தங்களுக்கு உதவி கிடைக்கவில்லை என சிறுமியின் தாய் கவலையோடு தெரிவித்தார்.
எனவே, தன் மகளின் மருத்துவ செலவுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என சிறுமியின் தாய் அரசுக்கு கோரிக்கை வைத்தார். ஊராட்சியின் அலட்சியத்தால் மாணவிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு அரசு உதவ முன் வர வேண்டும். அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’’ என கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: தியேட்டருக்கு வெளியே தொழிலதிபர் கார் மீது தாக்குதல்.. சென்னை நடந்தது என்ன?