கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் திறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பத்தாம் வகுப்புத் தேர்வு ரத்துசெய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதனால் நடப்புக் கல்வியாண்டிற்கான பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டுவருகின்றன. ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாகக் கூறப்படுகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த தம்பதியினர் பாண்டி – மீனா. இவர்களுக்கு வெண்ணிலா (17), அபிஷேக் (15), சாருகேஷ் (12) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். பாண்டி கட்டட ஒப்பந்த தொழில் செய்துவருகிறார்.
இத்தம்பதியின் இரண்டாவது மகனான அபிஷேக் கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்தார்.
கரோனா காரணமாக வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்பு மூலம் படித்துவந்த நிலையில் பாடங்கள் தனக்குப் புரியவில்லை எனப் பெற்றோரிடம் அபிஷேக் தெரிவித்தார். அதற்குச் சிறுவனின் பெற்றோர் ஆலோசனை வழங்கியதோடு சரியாகப் படிக்கவில்லை எனத் திட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலிலிருந்த அபிஷேக் இன்று (ஆக.19) விஷம் அருந்தியுள்ளார்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அபிஷேக்கை மீட்ட பெற்றோர் தேனி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆண்டிபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஆன்லைன் வகுப்பு புரியாததால் பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவமனையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நோயாளி!