தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் குறிப்பிட்ட சமுதாயப் பெண்களை இழிவுபடுத்தி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை கண்டித்து அச்சமுதாயத்தினர் பல்வேறு இடங்களில் சாலை மறியல், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆறுமுகத்திடம் இன்று பாமக நிர்வாகிகள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து பாமக நிர்வாகிகள் கூறுகையில், "ஏப்ரல் 18ஆம் தேதி சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட சமுதாயப் பெண்களை இழிவுபடுத்தி பேசிய ஆடியோ வெளியானதால் பொன்பரப்பி, பொன்னமராவதி உள்ளிட்ட இடங்களில் வன்முறை சம்பவம் நிகழ்ந்தது.
இச்சம்பவத்திற்கு காரணமான ஆடியோவை வெளியிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடக் கோரி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் பெரியகுளம் பகுதியில் உள்ள குறிப்பிட்ட சமுதாயத்தினரையும், பெண்களையும் இழிவுபடுத்தி பேசி அதனை சமூக வலைதளங்களில் வீடியோக்களாக பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து புகாரின் அடிப்படையில் இது குறித்து உரியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக துணை கண்காணிப்பாளர் தெரிவித்தார்" என்று கூறினார்கள்.