தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவருக்கும் இடையே இட தகராறில் பிரச்னை இருந்துவந்துள்ளது. இதனால், கடந்த 2016ஆம் ஆண்டு இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில் ராஜீவ்காந்தியின் உறவினர்கள் அழகுமலை, முருகன் இவர்களது மனைவிகளான நாகலட்சுமி, கமலா, மற்றும் சஞ்சீவியம்மாள் உள்ளிட்ட ஆறு பேரும் சேர்ந்து ராஜ்குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து சின்னமனூர் காவல் துறையினர் ஆறு பேர் மீதும் கொலைவழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தேனி மாவட்ட ஒருங்கினைந்த நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மூன்று பெண்கள் உட்பட ஆறு பேருக்கும், ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் ஆறு பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.