தேனி மாவட்டம் சிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ்-புவிதா தம்பதி. அவர்களுக்கு பாண்டி (9), சுதீஷ் (7) என்ற இரு மகன்கள் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் வசித்துவரும் அவர்கள், ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் சென்றுள்ளனர்.
அங்கு சென்ற அவர்கள் மகன் சுதீஷை, கூடலூர் குள்ளப்பக்கவுண்டன்பட்டியில் உள்ள புவிதாவின் பெற்றோர் மொக்கை - லட்சுமியின் வீட்டில் தங்கவைத்துள்ளனர்.
இந்த நிலையில் லட்சுமி சிறுவன் சுதீஷுடன் புல் அறுப்பதற்காக முல்லைப் பெரியாற்றங்கரையோர வயலுக்குச் சென்றுள்ளார். அப்போது கரையோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக ஆற்றில் விழுந்தான். அதனைக் கண்ட லட்சுமி கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்க முயற்சித்தனர்.
ஆனால் சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை. அதையடுத்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தகவலையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்த நிலையில் சிறுவனை மீட்டனர். அதையடுத்து சிறுவனின் உடல் உடற்கூறாய்விற்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதையும் படிங்க: சுரங்கத் தண்ணீரில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு!