தேனி: உத்தமபாளையம் கல்லறைத் தோட்டத்தை சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது மகன் மாதவன்(16), இவர் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்1 தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி வீட்டில் இருந்த சென்ற மாதவன் பின்னர் வீடு திரும்பவில்லை, இதனையடுத்து மாதவனின் பெற்றோர் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வந்தனர்.
இதனிடையே உத்தமபாளையம் கல்லறைத் தோட்டத்தின் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான பாழடைந்த கிணறு ஒன்றில் அருகே மாதவனின் பொருட்கள் கிடப்பதாகவும், இதனையடுத்து அந்த கிணற்றில் விழுந்து இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மாணவனை கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில் கிணற்றிலிருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு அங்கு சடலமாக இருந்த மாதவனின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் சந்தேகம் மரண வழக்காக இதனை பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தொடர்ந்து மாதவன் உடன் இருந்த நண்பர்கள் சிலரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாதவனின் நண்பர்கள் 17 வயது சிறுவர்கள் இருவரும் மதுரையைச் சார்ந்த அல்லா பிச்சை(23), என்ற ஒருவரும் மீது காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். அதனையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் 3 பேரும் சேர்ந்து மாதவனை கொலை செய்தது தெரியவந்தது.
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மாணவன் மாதவனின் வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கடந்த 18ஆம் தேதி மாதவன் மற்றும் மூன்று பேரும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் மூவரும் சேர்ந்து மாதவனை கத்தியால் குத்தி கொலை செய்து பின்னர் கிணற்றில் தள்ளி விட்டு சென்றதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் தொடர்ந்து இதுகுறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பண பிரச்சினை காரணமாக பள்ளி மாணவன் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : பிரதமர் மோடி - ஓபிஎஸ்ஸின் தனிப்பட்ட சந்திப்பு சாத்தியமா? - ஒற்றைத்தலைமை ஆட்டத்தில் காய் நகர்த்துகிறதா பாஜக?