நவக்கிரக பிரதான வழிபாட்டில் சனீஸ்வரபகவானுக்கு தனிச்சிறப்பு தான். பெரும்பாலான கோயில்களில் நவக்கிரகங்களிலோ அல்லது துணைக்கோயிலாகவோ தான் சனீஸ்வரபகவான் வீற்றிருப்பார். தமிழ்நாட்டிலேயே தனிக்கோயிலாக சனீஸ்வரபகவான் வீற்றிருப்பது திருநள்ளாறிலும், குச்சனூரிலும் மட்டும்தான்.
இதில் தேனி மாவட்டம் குச்சனூரில் புராண சிறப்பு மிக்க சுரபி நதிக்கரையில் சுயம்புவாக வீற்றிருக்கிறார் சனீஸ்வரபகவான். சாந்த சொரூபியாக காட்சியளிக்கும் குச்சனூர் சனீஸ்வரர் பகவானை தோஷ காலங்களில் வந்து வழிபட்டால் கஷ்டங்கள் குறையும் என்பது ஐதீகம்.
இந்நிலையில் இரண்டரை ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி நிகழ்வை முன்னிட்டு குச்சனூர் சனீஸ்வரபகவான் திருக்கோயிலில் சிறப்பு வழிப்பாடு நடத்தப்பட்டது. இதில் இன்று (டிச. 27) காலை 3மணிக்கு வேதிகார்ச்சனையும் நடைபெற்றது. பின்னர் காலை 5.22 மணியளவிலிருந்து தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு ஆயட்காரனும், அனுக்ரஹ மூர்த்தியுமான சனீஸ்வரபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி இடம் பெயர்ந்தார்.
அதைத் தொடர்ந்து மகா தீபம் ஏற்றி மூலவருக்கு சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்கள் ராசிக்கான சனி தோஷத்தின் வீரியத்தை குறைக்க வேண்டி வழிப்பட்டனர்.
இதையும் படிங்க..நெருங்கும் தேர்தல் மீண்டும் ஆட்சியமைக்குமா அதிமுக ?