தேனி மாவட்டம், கம்பம் மேற்கு வனச்சரகப் பகுதியிலிருந்து வெளியேறிய ஐந்து வயதுடைய ஆண் கடமான்(மிளா) ஒன்று ஊருக்குள் புகுந்தது. அங்கு போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததைக் கண்டு அஞ்சிய கடமான், கோசேந்திர ஓடை அருகிலுள்ள தனியார் நிலத்திற்குள் புகுந்தது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் மானை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது மக்கள் நடமாட்டத்தைக் கண்டு அஞ்சி ஓடிய மான் அங்கிருந்த இரும்பு வேலியில் சிக்கி படுகாயம் அடைந்தது. பொது மக்கள் உதவியுடன் மீட்கப்பட்ட கடமான் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது.
இதையடுத்து கம்பம் மேற்கு வனச்சரக அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட மானை கால்நடை மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்தனர். பின்னர், அங்கேயே மானை புதைத்தனர். கோடை காலங்களில் வனப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகும். அப்போது வனவிலங்குகள் வனத்தைவிட்டு அதிகளவில் வெளியே வரும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், ஆங்காங்கே வனப்பகுதிக்குள் தண்ணீர் தொட்டிகளை ஏற்படுத்த வேண்டும் என, வன ஆர்வலர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வானூர் அருகே மான் கறி விற்ற மூவர் கைது