தமிழ்நாடு – கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. நகரின் மையப்பகுதியில் கொச்சின் - தொண்டி தேசிய நெடுஞ்சாலை செல்வதால் அனைத்து வாகனங்களும் தேனி நகர் வழியாகத் தான் கடந்து செல்ல முடியும். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தேனி நகரில் உயர்மட்ட பாலம் அமைப்பது குறித்து திட்டமிடப்பட்டு பின் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டது.
இந்நிலையில் தேனி நகரில் கைவிடப்பட்ட உயர்மட்ட பாலங்களை அமைக்கும் பணி தற்போது மீண்டும் தொடங்கவுள்ளது. இதற்காக நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில் தலைமையிலான குழுவினர் இன்று தேனியில் ஆய்வு நடத்தினர். இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில்,
"கேரளா செல்வதற்கு மிக குறைந்த தூரம் கொண்ட பிரதான சாலையாக தேனி நகர் பகுதி சாலை உள்ளது. கேரளாவிலிருந்து மதுரை, திருச்சி போன்ற முக்கிய மாவட்டங்களுக்கு செல்வதற்கு இந்தச் சாலை மட்டுமே பிரதானமாக பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
இச்சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுதவிர வழிபாட்டுத் தலங்களான சபரிமலை அய்யப்பன் கோயில், வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில், குச்சனூர் சனீஸ்வரபகவான் கோயில் போன்ற கோயில்கள் உள்ளன. திருவிழாக்காலங்களில் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிமாக உள்ளது.
எனவே தேனி நகர்ப்பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும்பொருட்டு மூன்று இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மாநில நெடுஞ்சாலை எண் 45இல் பெரியகுளம் சாலையில் உள்ள ரயில்வே கேட் வரையில் 800 மீ நீளத்திற்கும், தேசிய நெடுஞ்சாலை எண் 85இல் மதுரை சாலையில் அரண்மனைப்புதூர் விலக்கு வரையிலான 400மீ நீளமும், பழைய பேருந்து நிலையம் அருகில் நேரு சிலை சந்திப்பில் 400 மீ நீளத்தில் என மூன்று உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த உயர்மட்ட பாலம் கட்டுமானம், மின்மாற்றி, மின் கம்பங்கள் மாற்றி அமைத்தல், புதிய மின்விளக்கு அமைத்தல், மாற்று சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது நெஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளர் முருகேசன், உதவி கோட்டப்பொறியாளர் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.