தேனி: மதுரை மாவட்டத்தில் சபரி மெட்டல் கடை நடத்தி வருபவர் கனக சபாபதி. இவர் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி, வியாபாரம் தொடர்பாக தேனி மாவட்டத்தின், சின்னமனூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார்.
தேனி கொட்டக்குடி ஆற்றுப்பாலத்தைக் கடந்து சென்று கொண்டிருந்த போது தனது பணப்பையை தவற விட்டுள்ளார். அந்த வழியாக வந்த, தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் சுரேஷ்குமார், உறுப்பினர் நாகேந்திரன் ஆகிய இருவரும் அந்த பணப்பையை கண்டெடுத்து, அதிலிருந்த ரூ.1.50 லட்சத்தை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜிடம் கொடுத்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய துணை காவல் கண்காணிப்பாளர், உரிய ஆவணங்களை சரி பார்த்து பின், பணத்தை தவற விட்ட கனகசபாபதியிடம் அவரது பணத்தை ஒப்படைத்தார். சாலையில் கண்டெடுத்த ரூ.1.50 லட்சத்தை காவல்துறையினரிடம் கொடுத்த குழந்தைகள் நலக்குழுவினரின் நேர்மையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி உள்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏடிஎம் இயந்திரம் உடைப்பு: குற்றவாளிக்கு போலீஸ் வலை!