தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கியின் ஏடிம் மையத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
காவலாளி அற்ற இந்த ஏடிஎம் மையத்தில், நேற்று இரவு (ஜூன் 17) அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் புகுந்து, இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதலில், கண்காணிப்புக் கேமராக்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு, தொடர்ந்து இயந்திரத்தின் முதல் நிலை கதவை உடைத்துள்ளனர்.
பின்னர் பணம் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் பெட்டகத்தை உடைக்க அவர்கள் முற்பட்ட நிலையில், அதனைத் திறக்க முடியாத நிலையில் பெரும் கொள்ளை தவிர்க்கப்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் இயந்திரத்தின் முன் திரையை மட்டும் உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் முக்கியத் தடயங்களை சேகரித்தனர். பின்னர் பெரியகுளம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, குற்றவாளிகளை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். இது தொடர்பாக ஜெயமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து பேசிய காவல் துறையினர், ”இயந்திரத்தின் தொடுதிரை பழுதடைந்துள்ளதால் உள்ளே இருக்கும் பண விவரம் இன்னும் தெரிய வரவில்லை. ஏடிஎம் நிறுவன உயர் அலுவலர்கள் உதவியுடன் பாதுகாப்புப் பெட்டகத்தை திறந்த பின்னர்தான் முழுத் தொகையின் விவரம் தெரிய வரும்” என்றனர்.
இதையும் படிங்க: ஸ்கிரீன் ஷாட் வைத்து மோசடி செய்த இளைஞர் கைது