தேனி: உத்தமபாளையம் அருகே உள்ள இராயப்பன்பட்டியில் உள்ள புகழ்பெற்ற பள்ளிகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இங்கு தங்கள் குழந்தைகளின் கல்விக்காக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தோரும் குடும்பத்துடன் வசித்துவருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள கீரன் ரைஸ்மில் உள்ளிட்ட தெருக்களில் எட்டு மாதங்களுக்கும் மேலாக கழிவுநீர் தேங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தனிநபர் ஆக்கிரமிப்பு, கட்டட வேலையின் காரணமாக தேங்கும் கழிவுநீர் ஆகியவற்றால் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழிவுநீர் தேக்கம்
இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. கழிவுநீர் தேக்கத்தால் உண்டாகும் கொசு உற்பத்தி, துர்நாற்றம் ஆகியவற்றால் தொடர்ச்சியாக நோய்வாய்ப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
![கழிவுநீர் தேக்கத்தால் சேறும் , சகதியுமாக காணப்படும் சாலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14320418_rpattyyyy.jpg)
அத்துடன் இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், முதியவர்கள் உள்ளிட்டோர் விபத்துகளில் சிக்கவும் நேரிடுகிறது. ஏற்கனவே, கரோனா தொற்று உள்ளிட்டவற்றால் மாணவர்கள் சிரமத்துக்குள்ளாகிவரும் நிலையில், சுகாதாரசீர்கேடு மாணவர்களின் குடும்பத்தினரை மேலும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
பலமுறை புகாரளித்தும் மெத்தனம் காட்டிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், உடனடியாக கழிவுநீரை அகற்ற அரசு உயர் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் கைது - முக்கிய குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை