தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (51). தொழிலதிபரான இவர் கம்பம் சாலையில் பேட்டரி கடையை நடத்திவருகிறார்.
இந்நிலையில், இவர் தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் திருப்பதி கோயிலுக்குச் சென்றுள்ளார். பின்னர் சாமி தரிசனம் முடித்துவிட்டு காலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் புறவாசல் கதவுகள் உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் பூஜையறை, படுக்கையறைகளிலிருந்த பீரோக்களும் உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க நகைகள், பொருட்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துவருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் சுமார் 280 சவரன் தங்க நகைகள், இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் உத்தமபாளையம் அருகே வடமாநில கொள்ளையர்கள் குடியிருப்புப் பகுதிகளில் நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது நடைபெற்றுள்ள இந்தக் கொள்ளைச் சம்பவத்தால் பொதுமக்கள் மேலும் பீதியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: இன்ஜினியர்களுக்கு தித்திக்கும் செய்தி! - இஸ்ரோவில் வேலை