மருத்துவப் படிப்புகளில் அகில இந்தியத் தொகுப்பிற்குத் தமிழ்நாடு ஒப்படைக்கும் இடங்களில் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
மேலும் அகில இந்தியளவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு எடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள், மருத்துவ கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, அக்குழுவின் பரிந்துரைப்படி இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். அந்தப் பரிந்துரையானது அடுத்து வரும் ஆண்டுகளுக்குத்தான் பொருந்துமே தவிர, இந்த ஆண்டுக்குப் பொருந்தாது எனவும் உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவ இட ஒதுக்கீடு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள குழுவை உடனே கலைக்கக் கோரியும், சட்டப்படி இட ஒதுக்கீடு வழங்கக்கோரியும் சீர்மரபினர் நல சங்கம் சார்பில் இன்று (நவ. 09) தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்திருந்தனர்.
அப்போது, மனு அளிக்க வந்தவர்கள் தங்களது வாயில் பூட்டு பூட்டியவாறு ஆட்சியர் அலுவலகம் முன்பாக கூடியதால் அவர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறக் கூடாது என மனு அளிக்க வந்த 10 நபர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்தனர்.