தேனி: இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் உள்நோயாளிகள் வார்டு பகுதியில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தேனி மாவட்டத்திற்கு, கடந்த இரண்டு நாட்கள் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், தேனி, போடி, பெரியகுளம், கம்பம், ஆண்டிபட்டி ஆகிய பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியும், தேனி மாவட்டத்தில் உள்ள அணைகள், நீர்நிலைகள் நிரம்பியும் வருகின்றன.
இந்நிலையில் நேற்று (நவ. 5) இரவு முதல் பெய்த கனமழையால், தேனி கானாவிளக்கு பகுதியில் உள்ள, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவில் மழை நீர் புகுந்துள்ளது.
இதையும் படிங்க: தீபாவளி எதிரொலி : சென்னை தி.நகரில் குவிந்த மக்கள் கூட்டம்! காணும் இடமெல்லாம் மனிதத் தலைகள்! தீபாவளி வியாபாரம் படுஜோர்!
மழை நீரானது முதியோர் உள்நோயாளிகள் பிரிவு, மத்திய ஆய்வக பிரிவு ஆகிய பகுதிகளில் புகுந்ததால் உள் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மேலும், சிகிச்சை மேற்கொண்டு வரும் முதியோர்கள் தங்கியிருக்கும் அறைகளில் உள்ள படுக்கையின் கீழ், ஆறு போல் மழை நீர் தேங்கி நிற்பதால் சிகிச்சை எடுத்து வரும் முதியவர்களும், அவர்களைப் பார்க்க வரும் உறவினர்களும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள், மருத்துவமனை வளாகத்திற்குள் குடை பிடித்தவாரு சென்று வருகின்றனர். மேலும், தேங்கி நிற்கும் மழை நீரால் முதியவர்களுக்கு பல்வேறு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. தினசரியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை மேற்கொள்வதால் உடனடியாக மருத்துவமனையில் தேங்கி நிற்கும் நீரை அப்புறப்படுத்த வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க: ஜாமீன் கோரி பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்?