தேனி: போடிநாயக்கனூர் அருகே திம்மிநாயக்கன்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இரு மதத்தைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். திம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் பல ஆண்டுகளாகக் காளியம்மன் கோயில் அமைந்து உள்ளது.
இந்தக் கோயில் வளாகத்தில் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த சிலர், இரு மதத்தினர் இடையே நிலவி வரும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாமியக் கொடிக் கம்பத்தைக் கோயில் வளாகத்தில் நள்ளிரவு நேரத்தில் வைத்து விட்டுச் சென்றதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும், இவ்வாறு கோயில் வளாகத்தில் இஸ்லாமியக் கொடியினை கண்ட பொதுமக்கள், கொடியினை அகற்றக் கோரி அரசு பேருந்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்த தகவல் அறிந்த காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தொடர்ந்து, அங்குப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால், பல ஆண்டுகளாக வழிபட்டு வரும் கோயில் வளாகத்தில் உள்ள இஸ்லாமியக் கொடியினை, சிலர் இருதரப்பு மக்களிடம் பிரச்னையை உண்டாக்கும் நோக்கத்தில் வைத்துள்ளதாகவும், எனவே அதனை அகற்றினால் மட்டுமே போராட்டத்தைக் கைவிட முடியும் எனப் பொதுமக்கள் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, கோயில் வளாகத்திலிருந்த இஸ்லாமியக் கொடியினை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகக் காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு உறுதி அளித்ததன் பேரில், சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.
இதனால் அந்தப் பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், தென் தமிழ்நாட்டின் பகுதிகளில் மதக் கலவரத்தை உண்டாக்கும் நோக்கத்தில் இத்தகைய செயல்களில் சிலர் ஈடுபட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மேலும், கடந்த ஆண்டு கோயம்புத்தூர் உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் முன்பு நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார். பின்னர் இது தொடர்பான விசாரணையில், உயிரிழந்த நபர் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும், மத வழிபாட்டுத் தலங்களில் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருந்ததாகவும் தேசிய புலனாய்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரயில்களை குறிவைக்கும் முயற்சியா? ரயில் பாதையில் தென்னை மரத்துண்டு வைத்த சம்பவத்தால் பரபரப்பு!