தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியைச் சேர்ந்த சிரஞ்சீவி, தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை பொம்மிநாயக்கன்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிரஞ்சீவியை தாக்கியுள்ளனர். இதனையடுத்து சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிரஞ்சீவி அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிரஞ்சீவியை தாக்கிய நபர்களை கைது செய்யக்கோரி சருத்துப்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் தேனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துசெல்ல அறிவுறுத்தியுள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் காவல்துறையினர் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இதில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உட்பட 10க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
இந்த கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்த எஸ்.பி. பாஸ்கரனுக்கு இடதுகண்ணில் பலத்த ஏற்பட்டதையடுத்து, சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் சருத்துப்பட்டியில் பதற்றமான சூழல் நிலவுவதால், அப்பகுதியில் காவல்துறை உயரதிகாரிகள் உட்பட 300க்கும் மேற்பட்ட காலவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணமானவர்களை தென்மண்டல ஐ.ஜி. டேவிட் ஆசீர்வாதம், தேனி மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, பெரியகுளம் கோட்டாட்சியர் ஜெயப்பரீத்தா ஆகியோர் அலுவலர்கள் தேடி வருகின்றனர்.