கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட குறிப்பிட்ட சமுதாயம் சார்பில் பெண்கள் உட்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இன்று ஒன்று கூடி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் தங்கள் சமுதாயப் பெண்களை அவதூறாக பேசியவர்களுக்கு எதிராக காலில் அணிந்திருந்த காலணிகளை காட்டியும், தரையில் அடித்தும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இது குறித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'கடந்த வாரம் தங்கள் சமுதாயப் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் ஆடியோ பரப்பி வருபவர்களை கைது செய்யக்கோரி புகார் அளித்து ஒரு வார காலம் ஆகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
எனவே அவதூறு ஆடியோ வெளியிட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் கைது செய்யாவிட்டால் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடிக்கும்' என எச்சரித்தனர்.