தேனி: பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் உள்ள சின்ராஜ் பூங்காவை, நகராட்சி நிர்வாகம் 51 லட்சம் ரூபாய் செலவில் மறுசீரமைப்பதற்காக கடந்த இரண்டு தினங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது. பூங்கா மறுசீரமைப்பு பணியில் இரு புறங்களிலும் உள்ள சாலைகளை ஆக்கிரமித்து பணிகள் மேற்கொள்வதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டினர்.
இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி பூங்கா சீரமைப்பு பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த நகராட்சி பொறியாளர் ஆவணங்களில் உள்ளபடி உரிய இடத்தில் தான் பூங்காக்கள் மறுசீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், சிலர் சாலைகளில் கடைகளை வைத்து ஆக்கிரமித்துள்ளதாகவும், அந்த ஆக்கிரமிப்பையும் அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து நகராட்சி பொறியாளர் மற்றும் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பூங்காவுக்கு எதிரே உள்ள கடைகள், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வருவதாக கூறினார்.
மேலும், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்ததையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
இதையும் படிங்க: ராகவேந்திரா கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு...