தேனி: பிரபல தனியார் ஜவுளிக்கடை உரிமையாளரின் மகனான முருகன் என்பவர் மீது, அதே கடையில் அழகுசாதனப் பொருட்கள் கடை நடத்தி வந்த தேனி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், 'ஜவுளிக்கடை உரிமையாளரின் மகன் ஆன முருகன் தன்னை காதலிப்பதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி தன்னிடம் உறவு வைத்துக்கொண்டு தன்னை ஏமாற்றி விட்டு, தற்போது வேறு ஒரு பெண்ணை நிச்சயம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து தான் கேட்டதற்கு தன்னை கொலை செய்வதாக மிரட்டினார்' எனக்கூறி தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், தற்போது முருகன் ஜாமினில் வெளிவந்து உள்ளார். இந்த நிலையில் ஜவுளிக்கடையின் உள்ளே தான் நடத்திவந்த அழகு சாதன அறையில் இருந்த 35 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கடையின் உரிமையாளர் மற்றும் மேலாளர்கள் திருடி விட்டதாகக் கூறி, மீண்டும் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஜவுளிக்கடை உரிமையாளர்களால் தனது வாழ்வும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டதாகக் கூறி, தனக்கு நியாயம் வேண்டி ஜவுளிக்கடையின் உள்ளே புகார் கூறிய பெண் கடந்த 21 நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
21 நாட்களாக இன்று(ஜூன் 21) தர்ணா போராட்டம் செய்த பெண்ணை காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி கடைக்கு வெளியே கொண்டு சென்று, அங்கு இருந்த காவல் துறையின் வாகனத்தில் ஏற்றி, அவரை தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள்: வெற்றிக்கான மாற்றுவழிகளை சொல்லும் உளவியலாளர்