தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் தனியார் குழந்தையின்மை, கருத்தரிப்பு மையம் செயல்பட்டுவருவதாக சுகாதாரத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நடைபெற்ற ஆய்வில் தேனி சாலையில் இயங்கிவந்த தனியார் மருத்துவமனை கண்டறியப்பட்டு இரண்டு முறை ஆய்வு செய்யப்பட்டன.
இதில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் அரசின் உரிய அனுமதி பெறாமல் சட்டவிதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டுவந்தது உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் தேனி மாவட்ட சுகாதாரப்பணிகளின் இணை இயக்குநர் லட்சுமணன் தலைமையில், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அன்புச்செழியன், குடும்பநலத் துறை துணை இயக்குநர் அசோகன், இந்திய மருத்துவக்கழக உறுப்பினர் தியாகராஜன் ஆகிய மருத்துவக்குழுவினர் நேற்று (பிப். 22) சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்குச் சீல்வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும், இதுதொடர்பாக தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
சட்டவிதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டதாக தனியார் குழந்தையின்மை மருத்துவமனை சீல்வைக்கப்பட்ட சம்பவம் ஆண்டிபட்டி பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தனியார் மருத்துவமனை வாயில் கேட் இடிப்பு: சிசிடிவியை கைப்பற்றி காவல் துறை விசாரணை