தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்ததாகக் கூறி பாரதிய ஜனதா கட்சியினர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திருவள்ளுவர் சிலையிலிருந்த கரையை நீர் ஊற்றி சுத்தம் செய்து பாலபிஷேகம் செய்த பாஜகவினர், திருவள்ளுவர் சிலைக்கு சந்தன பட்டை அடித்து குங்குமம் இட்டு பூஜை செய்தனர். மேலும், திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து வள்ளுவர் சிலையின் அருகே அமைந்துள்ள சிசிடிவி காட்சிகளைக் காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில் ஏழு நாள்களுக்குரிய காட்சிகள் மட்டுமே இருந்ததால் அவற்றில் வள்ளுவர் சிலையை அவமதிப்பது போன்ற காட்சிகள் இடம் பெறவில்லை எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலை அவமதிப்பு, சிலைக்கு காவி துண்டு அணிவிப்பது, என மேலும் சில இந்து அமைப்பினர் வள்ளுவர் சிலைக்கு வர்ணம் பூசி சீர் செய்யப் போவதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் திருவள்ளுவர் சிலையை சுற்றி இரும்புக் கூண்டு அமைத்து பெரியகுளம் காவல் துறையினர் இன்று பூட்டு போட்டு பூட்டிச்சென்றனர். மேலும் சிலையை அவமதிப்பு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தென்கரை காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'திருவள்ளுவர் யாருக்குத்தான் சொந்தம்?'