இந்திய மாணவர் சங்கம் சார்பில் 2017-18 ஆம் கல்வியாண்டில் பயின்ற பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்குத் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இலவச மடிக்கணினி வழங்காததைக் கண்டித்து இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி மாணவ - மாணவியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் கல்லூரிக்கு, இரண்டு மாணவ பிரதிநிதிகளை மட்டும் ஆட்சியரைச் சந்திக்க அனுமதித்தனர். இதனையடுத்து தங்களது கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்குவதற்காகச் சென்றவர்களை, வேலைப் பளு காரணமாக ஆட்சியர் சந்திக்க முடியாததால், உதவியாளர்களை விட்டு மாணவர்களைத் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மீண்டும் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்து, தொடர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு தரையில் அமர்ந்தனர். இதனால் மாணவர்கள் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். மேலும் வர மறுத்த மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்க முற்படுகையில், சங்கிலி போன்று மாணவர்கள் பின்னிப்பிணைந்ததால், அவர்களை அடித்து இழுத்துச் சென்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.