நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேனியில் இன்று பிரதமர் மோடி பரப்புரை செய்தார். இதற்காக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கரிசல்பட்டி விளக்கில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய மோடி,
"நாளை தொடங்க இருக்கிற தமிழ் புத்தாண்டிற்கு என் வாழ்த்துக்கள். நாளை அம்பேத்கரின் பிறந்த தினம், அவருக்கு எனது மரியாதைகள். இந்த மைதானத்தில் வெப்பமும், உற்சாகமும் அதிகமாக உள்ளது. மைதானத்திலும், சாலையிலும் ஏராளமானோர் திரண்டு இருப்பதை ஹெலிகாப்டர் மூலம் பார்த்தேன். அனைவருக்கும் என் நன்றிகள். இந்த மண் கலை, இசை மட்டுமல்லாமல் துணிச்சலுக்கும் பெயர் பெற்றது.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் ஏழைகளுக்காக வாழ்ந்தவர்கள். அவர்களின் நலத்திட்டங்களால் ஏழைகள் வறுமையிலிருந்து வெளிவந்தனர்.புதிய இந்தியா பற்றிய கனவுகளை நோக்கி நாம் செல்கிறோம். இந்தியா வரலாற்றில் முக்கியமாக தடம் பதித்துக் கொண்டிருக்கிறது. அதனை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் என் மீது குறை சொல்கிறார்கள். தமிழகத்தின் எதிரிகள் எல்லாம் வளர்ச்சிக்கு எதிராக ஒன்று கூடி இருக்கிறார்கள்.
எய்ம்ஸ் மருத்துவமனை மூலமாக இப்பகுதி மக்கள் பயனடைவார்கள். பல ஆண்டுகளாக போராடி கொண்டிருந்த விவசாயிகள் தங்களது விளை பொருள்களின் ஆதார விலையை ஒன்றரை மடங்கு அதிகரிக்க கோரிக்கை வைத்தனர். அதனை தற்போது அதிகரித்திருக்கிறோம். கங்கையை போல வைகையையும் தூய்மைப்படுத்துவோம். சுந்தர மகாலிங்க மலை மற்றும் ஐயப்பன் கோவிலுக்கு எளிமையாக, விரைவாக செல்ல வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முனைப்போடு இருக்கிறது இந்த அரசு" எனக் கூறினார்.
இந்த பரப்புரைக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.