கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இவற்றில் நோய்த் தொற்று குறைவான பகுதிகளில் சில நிபந்தனைகளுடன் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்புள்ள தேனி, கம்பம், போடி, பெரியகுளம், சின்னமனூர் ஆகிய பகுதிகளுக்கு ஊரடங்கில் எந்த தளர்வும் இல்லை.
ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறையே தொடரும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. நோய்த் தொற்று இல்லாத ஆண்டிப்பட்டி, கூடலூர் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி செயல்பட அனுமதியளிக்கப்பட்டது.
இந்நிலையில் தேனி நகர் பகுதியிலும் ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நினைத்து பொதுமக்கள், வணிகர்கள் தங்களது அன்றாடப் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.
இதனால், சாலையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமல்லாது பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்தது. தேனி பழைய பேருந்து நிலையம், மதுரை சாலை, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினரும் விழிபிதுங்கி நின்றனர். இதனால் ஊரடங்கு உத்தரவு கேள்விக்குறியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு