அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இன்று (ஆக.10) தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு இடங்களை ஒப்படைப்பதற்கு முன் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு சட்டம் 1993, 2006 ஆகியவற்றின்படி இளங்கலை, முதுகலை மருத்துவ சேர்க்கையில் உள்ள மொத்த இடங்களில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, தங்களது உடலில் செடி, கொடிகளை கட்டிக்கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்பு உரிமையாகும். 1994ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டம், இந்திய அரசியலமைப்பின் சரத்து 31பி, 31சி, பதிவு 257ஏ, 9வது அட்டவணை ஆகியவை மூலம் பாதுகாக்கப்பட்டது.
மேலும் அச்சட்டம், கல்வி வேலைவாய்ப்பில், எஸ்.சி/எஸ்.டி, பி.சி, எம்.பி.சி உள்ளிட்ட பிரிவுகளிக்கு 69 சதவிகிதம் இட ஒதுக்கீடு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் அகில இந்திய ஒதுக்கீடு தவறாக அமல்படுத்தப்பட்டதன் காரணமாக மொத்த இடங்களில் 50 சதவிகிதம், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு சென்று விடுகிறது. எனவே தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு சட்டத்தின்படி 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில் தமிழ்நாட்டு மக்கள் வீதிக்கு வந்து போராடும் சூழல் உண்டாகும்" என்றனர்.
முன்னதாக மதுரை சாலையில் இருந்து ஊர்வலமாக வந்த இவர்கள், ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் நின்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோசங்களை எழுப்பினர். பின்னர் கோரிக்கை மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த மனுக்கள் அளிக்கும் பெட்டியில் போட்டுவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.