தேனி: தேனி கொட்டக்குடி ஆற்றின் வடக்கு மடையில் திறக்கப்படும் நீர், மீறு சமுத்திரம் கண்மாயின் மறுகால் நீர், நேரு சிலை சந்திப்பில் உள்ள மழைநீர் வடிகால் வழியே வெளியேறி, பொதுப்பணித்துறை ராஜவாய்க்கால் மூலம் மதுரை ரோட்டில் உள்ள ராஜாக்குளத்தைச் சென்றடையும். இந்த வாய்க்கால் 2.4 கி.மீ துாரம் வரை உள்ளது.
இதனை ஆக்கிரமித்து பல ஆண்டு காலமாக குடியிருப்புகள் கட்டப்பட்டு வந்துள்ளது. இதனால் வாய்க்கால் சுருங்கியதையடுத்து, நீர் செல்ல வழி இல்லாத நிலை ஏற்பட்டது. மேலும், மழைக் காலங்களில் சாலைகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ராஜவாய்க்காலின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதன் நீர் பாதையை அகலப்படுத்த வேண்டும் என தேனி நகர் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி, ராஜவாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக கட்டடங்கள் ஆகியவற்றை இடிக்கும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது.
தேனி பங்களாமேடு பகுதியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை இடிப்பதற்காக, போலீசாரின் பாதுகாப்புடன் நகராட்சி நிர்வாகத்தினர் இடிக்கும் முயற்சியை மேற்கொண்டனர். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி குடியிருப்புவாசிகள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைர்க் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தேனி டிஎஸ்பி பார்த்திபன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். பின்னர் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடிக்கும் பணியானது நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.