தமிழ்நாட்டில் கள்ளர், மறவர் உள்ளிட்ட 68 உள்பிரிவுகளை உள்ளடக்கிய சீர்மரபினர் சமூக மக்கள் தங்களுக்கு வழங்கப்படும் இரட்டைச் சான்றிதழ் முறையை ரத்துசெய்து டிஎன்டி என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகப் போராடிவருகின்றனர். மேலும், டிஎன்டி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி அரசுக்கு வலியுறுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்மரபினர் சமூக மக்கள் தேனியில் நேற்று (ஜன.10) திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தேனி பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக வந்த இவர்கள் பழைய பேருந்து நிலையம் அருகே சாலையில் அமர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
தள்ளுமுள்ளில் ஒருவருக்கு கை முறிவு
அப்போது அங்கிருந்த காவல் துறையினர் அவர்களைத் தடுத்துநிறுத்தி அப்புறப்படுத்த முற்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பேருந்து சக்கரத்தின் முன்பக்கத்தில் படுத்து மறியல் செய்தவர்களை அப்புறப்படுத்த முற்பட்டதால் வாக்குவாதம் முற்றி, தள்ளுமுள்ளாக மாறியது.
இதனால், காவல் துறையினர் வலுக்கட்டாயமாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முற்பட்டதில், ஒருவரது கை முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: டிஎன்டி சான்றிதழ் வழங்கக்கோரி செல்ஃபோன் டவர் மீது ஏறி ஆர்ப்பாட்டம்!