பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பபட்டுள்ள வைகையாறு 18ஆம் நூற்றாண்டில் பொய்த்துப்போனதால் அன்றைய மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் (தற்போது தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்) வேளான் உற்பத்தி சீர்குலைந்தது. வேளான் தொழிலை மேற்கொண்ட இப்பகுதி மக்கள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி பஞ்சத்தாலும், பசியாலும் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிட்டது.
அந்த நேரத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நெல்லை மாவட்டம் சுந்தர மலையில் உள்ள சிவகிரி சிகரத்தில் உருவாகும் நீரோடு, பெருந்துறையாறு, சின்னஆறு, சிறுஆறு, சிறுதோணிஆறு, கட்டப்பனையாறு, இடமலையாறு, முல்லையாறு ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டு 300 கிலோமீட்டர் வடமேற்கு திசையில் பாய்ந்து, இறுதியில் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே அரபிக்கடலில் கலந்தது.
வீணாகக் கடலில் கலந்து கொண்டிருந்த ஆற்றுநீரை தென்தமிழ்நாடு நோக்கி திருப்பி கொண்டுவர நடைபெற்ற முயற்சிகள் அனைத்தும், நிதி பற்றாக்குறை, சரியான திட்டமிடலின்றி தோல்வி அடைந்த நிலையில், இந்த முயற்சியில் சற்றும் தளராது மன உறுதியுடன் பெரியாற்றில் அணைகட்டி தென்தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தினார் ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னிகுவிக்.
தென்தமிழ்நாடு மக்களால் தெய்வமாகப்போற்றப்படும் கர்னல் ஜான் பென்னிகுவிக் 1911ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி உயிரிழந்தார். எனவே அவரது 109வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் அமைந்துள்ள பென்னிகுவிக்கின் மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணை விஷயத்தில் தொடர்ந்து தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட்டுவருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
இதுகுறித்து முல்லைப்பெரியாறு அணை மீட்புக்குழுவினர் கூறுகையில், ”அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளுக்குத் தேவையான சிமென்ட் மூட்டைகளை எடுத்துச் செல்வதற்கு தமிழ்நாடு பொதுப்பணித் துறையினருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தினசரி அணைக்குச் செல்கின்ற தமிழ்நாடு அலுவலர்களை கேரள வனத்துறையினரின் சோதனைச் சாவடியில் கையெழுத்து இட்டு செல்லுமாறு வற்புறுத்துவது வேதனையளிக்கிறது. எனவே கேரள அரசின் பிடியில் இருந்து முல்லைப் பெரியாறு அணையை முழுமையாக மீட்க வேண்டும்” என்றனர்.
இதையும் படிங்க:முல்லைப் பெரியாறு அணை தொடர்பான ஆக்கிரமிப்பு வழக்கு; கேரள அரசுக்கு நோட்டீஸ்!