தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம் பட்டியை சேர்ந்தவர் தங்கதுரை(29). இவர் சென்னையில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில், ஏப்.12ஆம் தேதி சென்னை வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சென்னை வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தங்கத்துரையின் பெற்றோர் தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தேனி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். அதில், சென்னையில் தங்கி டிராவல்ஸ் நடத்தி வரும் தங்க துரையிடம் சிலர் தொடர்புக்கொண்டு அவிவா என்ற நிறுவனத்தின் பெயரைக் கூறி, வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கித் தருகிறோம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
டிராவல்ஸ் தொழிலில் சரிவர வருமானமின்றி, தவணை செலுத்தக் கூட பணம் இல்லாமல் தங்கதுரை இருந்துள்ளார். அதனால் கடன் வாங்க ஒப்புக் கொண்டார். தங்கத்துரை கொடுத்த ஆவணங்களை பயன்படுத்தி, அவிவா என்ற நிறுவனத்தினர் கடன் வாங்கி தங்கத்துரைக்கு கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக நடந்த விவரங்கள், பணம் செலுத்திய வங்கி கணக்கு எண் ஆகிய அனைத்தையும் அவர் கைப்பட எழுதிய டைரி தற்போது எங்களுக்குக் கிடைத்துள்ளது. எனவே மோசடி செய்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கத்துரையின் பெற்றோர் காவல்துறையினரிடம் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.