தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டியில் பிளாசம் கார்மென்ட் என்ற தனியார் தொழிற்சாலை கடந்த மூன்று ஆண்டாக செயல்பட்டுவருகின்றது. ஆயத்த ஆடைகள் தயார் செய்யும் இத்தொழிற்சாலையில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பணியாற்றிவருகின்றனர்.
இந்நிலையில் இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக வழங்க வேண்டிய சம்பள பாக்கியும் தீபாவளி ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை என்று கூறி சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆலையின் உள்ளே அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதனையறிந்த அவர்களது உறவினர்கள் ஆலையின் வெளியிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவதானப்பட்டி காவல் துறையினர் ஆலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆலையின் உரிமையாளர் வெளியூரில் இருந்ததால், தொடர்ந்து இது சம்பந்தமாக முடிவு ஏதும் எட்டப்படவில்லை. அதன்பின், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், உறவினர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து தற்காலிகமாகப் போராட்டம் கைவிடப்பட்டது.
இது குறித்து அங்கு பணிபுரியும் பெண்கள் கூறுகையில், "கடந்த மூன்று ஆண்டுகளாகவே இத்தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்களுக்கு முறையாக சம்பளம் தராமல், பல்வேறு வகையிலும் கொத்தடிமை போன்று சிரமம் கொடுத்துவந்தனர். மேலும் தற்போது தீபாவளி பண்டிகை என்பதால் அதற்காக ஏராளமான துணிகள் தயார் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளதால், பெண்களை கடுமையாக வேலை வாங்கி வருகின்றனர்.
அதே சமயம் கடந்த மூன்று மாதங்களாக சம்பளமும் தரவில்லை, தீபாவளி ஊக்கத்தொகையும் வழங்கவில்லை என்பதால்தான் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆலையின் உரிமையாளர் எங்களுக்குத் தர வேண்டிய சம்பள பாக்கி, ஊக்கத்தொகை வழங்கவில்லை என்றால் குடும்பத்துடன் இங்கே வந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என எச்சரித்தனர்.
நள்ளிரவுவரை நீடித்த இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: சுஜித் உள்ள போயி 14 மணி நேரமாச்சே... பொதுமக்கள் புலம்பல்