தேனி மாவட்டம் போடி நகராட்சியில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரம், உள்ளாட்சி, காவல் உள்ளிட்ட துறை அலுவலர்களிடம் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று விரிவாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோய்த் தொற்று, சிகிச்சை பெறுவோர், தனிமைப்படுத்தப்பட்டோர், சிகிச்சை முடித்தவர்கள், கிருமிநாசினி தெளித்தல், வீடு தேடி அத்தியாவசியப் பொருள்கள் வழங்குதல், அம்மா உணவகம், குடிமைப்பொருள், நிவாரணம் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
மேலும், தேனி மாவட்டத்தில் கடந்த 11 தினங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கரோனா தொற்று ஏதும் உறுதிசெய்யப்படாதது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மக்கள் தங்களுக்குள் கண்டிப்பும், அலுவலர்கள் மக்களிடம் கனிவுடன் கூடிய கண்டிப்பையும் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய நகராட்சிகளுக்கு நேரடியாகச் சென்று சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார். அங்கு தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.