தேனி மாவட்டம், அல்லி நகரத்தைச் சேர்ந்தவர் தாமோதரன். ஓவியரான இவரது மகள் உதயகீர்த்திகா அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழியில் படித்தார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீதான ஈர்ப்பால், இவருக்கு சிறு வயது முதலே, விஞ்ஞானி ஆக வேண்டும் என்பது லட்சியம். உக்ரைனில் கார்க்கியூ நேஷனல் ஏரோஸ்பேஸ் யூனிவர்சிட்டியில் நான்கு ஆண்டுகள் ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் படிப்பை இந்த மாதத்தில் முடித்துள்ளார். அதில் 92.5 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளார்.
தற்போது போலாந்து நாட்டின் அனலாக் விண்வெளி பயிற்சி மையத்தில் (Analog Astronaut Training Cente) ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாட்டுகளின் விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து பயிற்சி பெறவும், அவர்களுடன் விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் உதய கீர்த்திகாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இப்பயிற்சிக்கு சர்வதேச அளவில் 20 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். அதில் இந்தியாவில் இருந்து உதயகீர்த்திகா மட்டுமே பங்கேற்க உள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து, தமிழ் வழிக்கல்வியில் படித்து விண்வெளி ஆராய்ச்சிகளில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் அதற்கான பயிற்சியும், ஆராய்ச்சியும் மேற்கொள்ளச் செல்லும் அவரை பலரும் வாழ்த்தி வருகின்றனர். தங்களான நிதியுதவியும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார், மாணவி வீட்டிற்குச் நேற்று சென்றார். மாணவியை வாழ்த்திய அவர், பயிற்சிக்கு தனது பங்களிப்பாக ரூ.3லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். எம்.பியாக வெற்றி பெற்றதும் ரவீந்திரநாத்குமார் வழங்கும் முதல் நிதியுதவி இதுவாகும்.