தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (டிச.18) தேனியில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று முடிவுற்ற அரசு திட்டப்பணிகள், மினி கிளினிக்கள், கடனுதவிகளை வழங்கினார்.
முதலாவதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் சார்பில் கோகிலாபுரம், சீப்பாலக்கோட்டை, அம்பாசமுத்திரம், தேக்கம்பட்டி, வைகை புதூர் காந்தி நகர் காலணி, கோட்டார்பட்டி, ஊஞ்சாம்பட்டி ஆகிய ஏழு இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்தார்.
கடனுதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்:
இதையடுத்து தேவதானப்பட்டி பேரூராட்சியில் கூட்டுறவுத் துறை சார்பில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நவீனமயமாக்கப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்பட 157 பயனாளிகளுக்கு 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.
இது தவிர பெரியகுளம் எண்டப்புளி ஊராட்சியில் தோட்டக்கலைத் துறையின் மூலம் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியில் இருந்து 46 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விவசாயிகள் பயிற்சி மையம், கிட்டங்கியினை விவசாயிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வுகளில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி எம்பி ஓபி.ரவீந்திரநாத், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் உள்பட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்டத்திற்குள் வந்த ரயில்: மலர்த் தூவி வரவேற்ற எம்.பி., ஓ.பி. ரவீந்திரநாத்!