தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. 71 அடி நீர்த்தேக்க கொள்ளவு கொண்ட வைகை அணை வடகிழக்கு பருவமழையினால் தற்போது 61அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த வைகை பூர்விக பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி, இன்று முதல் வருகிற டிசம்பர் 17ஆம் தேதி வரையில் மூன்று கட்டங்களாக 1,792 மில்லியன் கன அடி நீர் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை முதல் 3ஆயிரம் கனஅடி நீர் சிறிய மதகுகள் வழியாக திறக்கப்பட்டது. இதன்மூலம், 1,39,109 ஏக்கர் வைகை பூர்விக பாசன நிலங்கள் பயனடைய உள்ளது. ஏற்கெனவே மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கு முறைப்பாசனத்தில் 1,200 கனஅடி நீர், மதுரை குடிநீருக்காக 69 கனஅடி நீர் என மொத்தம் 1,269 கனஅடி நீருடன் சேர்ந்து கூடுதலாக 3ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் சீறிப்பாய்ந்து வரும் தண்ணீரால் வைகை அணை முன்பாக இரு கரைகளையும் இணைக்கும் தரைப்பாலம் மூழ்கியது.
மேலும், வைகை ஆற்றின் கரையோரப்பகுதி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை அணையிலிருந்து பூர்விக பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!